பண்டாரவளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மலையக மக்களின் அடிப்படை தேவைகள், காணி உரிமை, வீட்டு உரிமை மற்றும் நியாயமான சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், மலையக மக்கள் இந்நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்றும், அவர்கள் இரண்டாம் தர மக்களாக கருதப்பட முடியாது என்றும் வலியுறுத்தினார். “மலையக மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தனர். அவர்கள் கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இறந்த பின்பும் இம்மண்ணுக்கு உரமாகினர். அவர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும்,” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக ஒரு அங்குலேமேனும் காணி உரிமை இன்றி வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு, காணி மற்றும் வீட்டு உரிமை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், இதற்கான வேலைத்திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 1,750 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்குள் அந்த சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலும், தோட்டங்களைச் சூழ்ந்துள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “மக்களுக்குரிய சுகாதாரம் அரசாங்கத்தின் பொறுப்பு. அதனை எந்தக் கம்பனிகளிடமும் ஒப்படைக்க அரசாங்கம் தயாரில்லை,” என அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி மேலும், மலையக மக்களின் சமூக அந்தஸ்த்து, கலாசார உரிமை மற்றும் அவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும், இது அனைத்து இன மக்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், பாரம்பரிய அரசியல் முகாம்களை நிராகரித்து புதிய நம்பிக்கையுடன் தேசிய மக்கள் சக்திக்குத் தங்கள் வாக்குகளை வழங்கிய மலையக மக்களை ஜனாதிபதி பாராட்டினார். “மக்கள் எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் துரோகம் செய்யமாட்டோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவோம்,” என அவர் உறுதியளித்தார்.








