கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.
பிரதி அமைச்சர் தெரிவித்ததாவது, “ராஜபக்ஷர்கள் உட்பட கடந்த கால ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகள் வெளிவரும் போதே பலர் அச்சமடைந்துள்ளனர். அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ரக்பி வீரர் வாசிம் தாஜூதீனின் படுகொலை வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், நாமல் ராஜபக்ஷ அச்சமடைந்து காவல்துறை திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
மேலும், காவல்துறை மா அதிபருக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான கருத்தை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார். “சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவை அரசியல்மயப்படுத்த அரசாங்கத்துக்கு எந்த நோக்கமும் இல்லை. ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களின் அடிப்படையில் மட்டுமே சில அதிகாரங்கள் காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்படுகின்றன. இதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது,” என அவர் தெரிவித்தார்.








