கல்பிட்டிய துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான மைதானத்தில் கடந்த ஜூன் 17ம் திகதி குண்டு அகற்றும் பயிற்சியின்போது ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
விமானப்படை தளபதி, சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது, பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த துப்பாக்கி சுடும் மைதானத்தின் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் முன் அனுமதி அல்லது அறிவிப்பு இன்றி மூன்று நபர்கள் பிரவேசித்தனர்.
கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு விமானப்படை வீர்கள் மற்றும் ஒரு பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி அவர்களின் அடையாளத்தை விசாரித்துள்ளார்.
விசாரணையின் போது, அம்மூவரில் ஒருவர் பொலிஸ் அதிகாரி என்பதும், ஏனைய இருவர் சிவில் பிரஜைகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என குறிப்பிடப்படுகிறது.
பயிற்சி காலப்பகுதியில் மைதானம் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அப்பகுதியில் உள்ள அனைத்து நபர்களின் பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் விமானப்படையிடம் இருந்ததாகவும் விமானப்படை சுட்டிக்காட்டி உள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்து அபாயங்களைத் தடுக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதாகவும் விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நியமிக்கப்பட்ட விசாரணை சபை சம்பவத்தின் சகல சூழ்நிலைகளையும் மீளாய்வு செய்து விரிவான அறிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







