வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், கடிதத்தில் கையெழுத்து பெறும் பெயரில் அவரது அறைக்குள் நுழைந்து சுட்டுக் கொன்று தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துடன், பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் சமூகத்தில் விவாதமாக மாறியுள்ளது.
லசந்த விக்ரமசேகர, “சன்ஷைன் சுத்தா” என அறியப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததுடன், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லசந்த விக்ரமசேகர, தற்போது சிறையில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் “ஹரக் கட்டா” எனப்படும் நதுன் சிந்தகவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேபோல் “மிதிகம சூட்டி” மற்றும் “மிதிகம ருவான்” ஆகிய ஹரக் கட்டா குழுவினருடனும் அவர் நெருங்கிய உறவைப் பேணியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் மிதிகம ருவான் அந்தக் குழுவிலிருந்து பிரிந்தபின், லசந்த விக்ரமசேகரவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறையில் இருந்த மிதிகம ருவான், லசந்த விக்ரமசேகரை குறிவைத்து பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்,
“மாண்புமிகு தலைவரே, நீங்கள் இப்போது வெள்ளை நிறத்தை அணிந்துள்ளீர்கள். கருப்பு அணிந்திருந்த போது நாம் ஒரே படகில் இருந்தோம். பொய்யாக நடந்து என் பையன்களை சிறையில் அடைக்க முயற்சித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்,”
என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி, லசந்த விக்ரமசேகர தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், பல குற்றவியல் கும்பல்கள் தமக்கு எதிராக மிரட்டல்கள் விடுப்பதாகவும், நீதிமன்றம் அல்லது பிரதேச சபைக்கு வரும்போது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை தெரிவித்திருந்தார்.
அந்நேரத்தில், அவரது உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்று பொலிஸார் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது, வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலைக்காக “மிதிகம ருவான்” தரப்பினர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தென் மாகாண பொறுப்பாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் மேற்பார்வையில் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.








