வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கும் அரசாங்கத் தீர்மானத்தை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய அனுமதி கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 2021 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ கஞ்சாவுக்கான உலகளாவிய தேவை குறைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது மட்டுமல்லாமல், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது என மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
இதனால் மனநோய், போதைப்பழக்கம், நுரையீரல் நோய்கள் மற்றும் சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக, நாட்டின் கடன் மற்றும் வெளிநாட்டு பணவனுப்பலுடன் ஒப்பிடும்போது, கஞ்சா பயிரிடுவதால் கிடைக்கும் ஆதாயம் மிகக் குறைவாக இருக்கும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த முயற்சி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் பயனளித்தாலும், இலங்கையர்களுக்கு பெரும் துயரத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்று இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.








