அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14ஆவது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
2018க்குப் பிறகு சபை மீண்டும் கூடுவது இதன் சிறப்பு அம்சமாகும்.
சுனாமிக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சபை, தேசிய மற்றும் மாகாண மட்ட அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த அமர்வில், தேசிய அவசரகால செயற்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. காலநிலை மாற்றம், சட்ட திருத்தங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
ஜனாதிபதி, உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும், வீடுகளுக்கான இழப்பீடுகளை அதிகரிக்கவும், இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இதன் போது பதுளை பூனாகலையில் 58 குடும்பங்கள் இன்னும் முகாம்களில் இருப்பது தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் இறுதிக்குள் அவர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என ஊவா ஆளுநர் தெரிவித்தார்.
பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி கிருஷாந்த அபேசேன, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.








