போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக அடையாளம் கண்டு பணிநீக்கம் செய்வது குறித்து காவல்துறை மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார்.
இதற்காக முறையான திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் காவல் நிலைய மருத்துவமனைகள் மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
எதிர்காலத்தில், காவல் நிலைய மட்டத்தில் நேரடியாக போதைப்பொருள் சோதனைகள் மேற்கொண்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை பணிநீக்கம் செய்வது திட்டமிடப்பட்டுள்ளது.
காவல்துறையில் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 100 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, மன்னார் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு கான்ஸ்டபிள், தனது சக காவலர்களின் பைகளிலிருந்து ரூ.12,200 திருடியதாக நேற்று (18) கைது செய்யப்பட்டார். அவர், திருடிய பணத்தை போதைப்பொருள் வாங்குவதற்காக பயன்படுத்தினார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.








