எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள், வேலை வாய்ப்புகளுக்காக மே 23 அன்று எத்தியோப்பியாவுக்கு சென்றதாகவும், பின்னர் சுசுகி வாகனத்தில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மூன்று நபர்கள் காணாமல் போனமை குறித்து இலங்கைத் தூதரகம், அந்த நாட்டில் உள்ள போலே துணை நகர காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மே 26, 2026 அன்று விசாரணை தொடங்கியது.

அதிகாரிகள், உயர் தர டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்து, ஓரோமியா பிராந்தியத்தின் ஷஷெமெனேவில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து அவர்களைக் மீட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் குறித்த குடியிருப்புக்குள் அதிரடியாக நுழைந்து, பணயக்கைதிகளை விடுவித்து, சந்தேக நபர்களை எவ்வித அசம்பாவிதமும் இன்றி கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை (NISS), கூட்டாட்சி காவல்துறை, தகவல் வலையமைப்பு பாதுகாப்பு நிர்வாகம் (INSA) மற்றும் ஓரோமியா பிராந்திய காவல்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலம் இந்த மீட்புப் பணி வெற்றிகரமாக நடைபெற்றது என செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here