கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரி பிரான்சே, ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய திட்டத்தின் உதவி பிரதிநிதி நளின் முனசிங்க, உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கடற்றொழில்சார் நிபுணர் பாலித கித்சிறி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையின் கடற்றொழில்துறைக்கும், கடல் வளங்களை பாதுகாப்பதற்கும் ஐ.நா மற்றும் அதன் துணை அமைப்புகளால் வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இதனை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவைப்பாடும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உதவிகள் தொடர்பிலும் கோரிக்கை முன்வைத்தார்.
இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், அவற்றை தீர்ப்பதற்கு தமது அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








