பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் பலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் ஈராக், குவைத், கட்டார், ஓமான், லிபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பதிலமைச்சர் தாரக பாலசூரிய, பலஸ்தீன மக்களுடனான இலங்கையின் உறுதியான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு தேயிலையை வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் பலஸ்தீன மக்களுடன் இலங்கையின் ஒற்றுமையை வெளிப்படுத்தியதோடு பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்கான கூட்டு நடவடிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.
பலஸ்தீனத்தில் போர் முடிந்து சுமுகமான நிலைக்கு திரும்பியவுடன், பாடசாலையொன்றை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்தத் தேயிலைத் தொகை இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவின் ரியாத்துக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து காசாவுக்கு இலங்கை தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.