ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து முக்கியக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு, ஐ.நா. பொதுச் சபையின் பக்கவாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ X (முந்தைய Twitter) கணக்கில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத்,
“இலங்கை–இந்தியா உறவுகளை வலுப்படுத்தவும், இருநாட்டு நட்புறவு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது” என தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா பயணமானனர்.
அதன்படி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு, ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார்.
இருதரப்பு சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது
மேலும், தனது அமெரிக்க விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரையும் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இருநாட்டு ஒத்துழைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








