
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொழும்பில் சந்திக்க உள்ளதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து டெல்லி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பிற்பகல் அவர் கொழும்புக்கு வரவுள்ளார்.
இதேவேளை பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த வியாழக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதன் போது, பிரதமர் மோடியின் இலங்கை விஜயம், கொழும்பு சந்திப்புகள் மற்றும் இலங்கையில் அவர் செல்விருக்கும் இடங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக செயலாளருமான தினித் சிந்தக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமத நிலை குறித்தும் இதன் போது பேசப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் இலங்கை விஜயம் இதுவல்ல. இதற்கு முன்பு 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவரின் முதல் இருதரப்பு விஜயமாக 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகள் மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் 2017 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை நடத்திய சர்வதேச வெசாக் தினத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். மேலும் 2019 ஆம் ஆண்டில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களுக்கு பிறகு, இலங்கைக்குச் சென்ற முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் இருதரப்பு இணைப்பு திட்டங்கள் உட்பட இலங்கை – இந்திய உறவில் பல தூண்கள் உள்ளன. இதில் முதன்மையான இணைப்பு திட்டமாக இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதை திட்டம் உள்ளது.
அதே போன்று நாகப்பட்டினத்தை திருகோணமலையுடன் இணைக்கும் பல்துறை பெட்ரோலிய குழாய் திட்டமும் உள்ளது. ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொடர் இழுபறி நிலைகள் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.
குறிப்பாக ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பல விடயங்களில் ஏற்பட்டுள்ள தாமத நிலை குறித்து டெல்லி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே 2023 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் பிரதமர் மோடி அவதானம் செலுத்த உள்ளார். இதேவேளை, அநுராதபுரம் மகாபோதி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மோடி விஜயம் செய்யவுள்ளார்.
அத்துடன் முந்தைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார வழித்தடத்தின் ஊடாக 6 ரில்லியன் டொலர் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உட்பட பல துறைகளை சார்ந்த பொருளாதார நன்மைகள் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். இந்த விடயத்தை அண்மைய டெல்லி விஜயத்தின் போது ரணில் விக்கிரமசிங்க நினைவுக் கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






