பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு, எதிர்க்கட்சியினர் பேசும் போது ஒலிவாங்கிகள் துண்டிக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சியின் கடமை என்றும், அதைத் தடுக்க முயல்வது கீழ்த்தரமான செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவைப் பிரதேசங்களை மையமாகக் கொண்டு நேற்று (15) நடைபெற்ற “கிராமத்துக்கு கிராமம், வீட்டுக்கு வீடு” நடமாடும் சேவை வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கம் தீர்வுகளை வழங்காமல் எதிர்க்கட்சியின் குரலை அடக்குகிறது எனக் கூறினார்.

மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எவ்வித தீர்வுகளும் இல்லையென சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். ரணசிங்க பிரேமதாச தொடங்கிய ஆடைத் தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாகவும், யானை-மனித மோதல், பயிர் சேதம் மற்றும் சொத்து இழப்புகளுக்கு எந்த தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எடுத்துரைத்த அவர், நெல்லுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட உத்தரவாத விலை கூட இதுவரை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்ற பெயரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாகவும், உரிய விலை இல்லாமல் விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை விற்க முடியாமல் தவிக்கிறார்கள் என்றும் சஜித் கூறினார்.

சுகாதார துறையிலும் கடுமையான பிரச்சினைகள் நிலவுவதாக சஜித் பிரேமதாச எச்சரித்தார். கெபித்திகொல்லாவ வைத்தியசாலையில் போதுமான டயாலிசிஸ் உபகரணங்கள் இல்லை என்றும், இலவச சுகாதாரத்தில் மருந்துகள் தட்டுப்பாடு கடுமையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மனித உரிமையாகக் கருதப்படும் இலவச சுகாதாரத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமை என்றும், அரசாங்கத்தின் பொய்களுக்கு இனி மக்கள் ஏமாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here