வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற பிரச்சாரம் முற்றிலும் பொய்யானது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில், கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில், கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாதிருக்கக் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
“புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் வரலாறு, அழகியல் பாடங்கள் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், மாணவர்களுக்கு மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், தொழில்சார் திறன்களை வழங்கும் நோக்கத்திலுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.”
இந்த திட்டம் தொடர்பாக பாடநிபுணர்களுடன் விரிவாக கலந்துரையாடிய பிறகே செயல் திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையான தகவல்களை அறிந்துகொண்டு அவற்றை சமூகத்தில் தெளிவுபடுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி கல்வி அமைச்சர் வைத்தியர் மதுர சேனேவிரத்ன, தொழில்சார் கல்வி இணை அமைச்சர் நலின் ஹேவகே, தொழிலாளர் இணை அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கல்வித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








