சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) கலந்து கொண்ட அமைச்சர் புதிய அரசின் கொள்கைச் சட்டம் தொடர்பில் இவ்வாறு கூறினார்.
அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், “புதிய அரசின் கொள்கைச் சட்டகத்தில் ‘பாதுகாப்பான சிறுவர் உலகம் – ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி’ எனும் கொள்கை ரீதியான கடப்பாட்டின் பிரதான கோட்பாடாக அமைகின்ற பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித பாதுகாப்புத் தொடர்பாக சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, மற்றும் இலங்கை பொலிஸ் போன்றன முக்கிய பணிகளை ஆற்றி வருகின்றது.
பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித வன்முறைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அதிகாரசபை 24 மணிநேர முறைப்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்கியுள்ளது. ஆயினும், முறையான வகையில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரிதமாக தலையிட்டு செயற்படுவதற்கு இயலுமான வகையில் புதிய படிமுறைகளை மேற்கொள்வதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இதன்படி, “மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய தேசியமட்டக் குழுவொன்றை நியமித்தல். பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற உடலியல் ரீதியான தண்டனைகளை இல்லாதொழிப்பதற்கு இயலுமான வகையில் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் வழக்குக் கோவையை துரிதமாக திருத்தம் செய்தல். பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் பற்றி அறிக்கையிடும் போது பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாவதைத் தடுப்பதற்கு இயலுமான வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உட்சேர்த்து, தற்போது வரைவாக்கம் செய்யப்படுகின்ற ஊடக ஒழுக்கநெறிக் கோவையை துரிதமாக வெளியிடல்
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தனித்துவ அடையாளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக செய்தித் தொடர்பாடலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக குற்றத்தால் பலியானவர்கள் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உடனடி தலையீடுகளைப் பெற்றுக் கொள்ளல்” போன்ற படிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.








