தன்னை பணி இடைநீக்கம் செய்தது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு கடிதம் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்குமாக இருந்தால், தனக்கு கிடைப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்கு எவ்வாறு வெளியிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும், “ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அரச சேவையிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்பித்துவிட்டே தேர்தலில் போட்டியிட்டேன்.

ஆனால், இதுதொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவோ அல்லது சுகாதார அமைச்சின் செயலாளரோ இதற்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக எனக்கு அறிவிக்கவும் இல்லை.

அவ்வாறு இருக்கையில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதமொன்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில், என்னை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

உண்மையில், இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சேவையாளருக்கு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தால் அந்தக் கடிதம் கிடைப்பதற்கு முன்னரே, சமல் சஞ்சீவவை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்து அரசாங்கத்துக்கு எதிராக விரக்தியை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சிகள் எதுவும் இடம்பெற்றனவா என்பது தொடர்பில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட கடிதம் சுகாதார சேவையாளர் ஒருவருக்கு கிடைப்பதற்கு முன்னர் அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது என்றால், சுகாதார அமைச்சர் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

எனவே, சுகாதார அமைச்சின் செயலாளர் எனக்கு ஏதாவது கடிதம் அனுப்பி வைத்திருந்தால் அந்தக் கடிதம் எனக்கு கிடைப்பதற்கு முன்னர் அது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here