நாட்டில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இந்த நிலைமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரினால் பரவுகின்றது. பாடசாலைகள் தற்போது விடுமுறையில் இருப்பதால், சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வயல் நிலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளதால், இந்த நோய் பரவுவதற்கான அபாயம் கூடிவருவதாக அவர் கூறினார்.
மேலும் காய்ச்சல் 5 முதல் 6 நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என்றும், கண்கள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் அடைதல், வயிற்று வலி, சிறுநீர் கடும் மஞ்சள் நிறம் அடைதல் போன்றவை முக்கிய அறிகுறிகள் எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நோய்க்கு சிகிச்சை இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
மேலும், எலிக்காய்ச்சல் சிறுநீரக தொற்றுக்கும் வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.








