பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும், நுகர்வோருக்கும், விசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
சந்தையில் பாரிய அளவில் அரிச்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு, வெள்ளை, சிவப்பு உட்பட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு அரிசி வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிக கேள்வியுள்ள நாடு அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அரிசி தட்டுப்பாட்டுக்கு தற்காலி தீர்வை வழங்கும் நோக்கில் 70 ஆயிரம் மெற்றிக் தொன் நாடு அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த அரிசியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்ய உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த,
”பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் விவசாய அமைச்சு ஒன்றிணைந்து கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை இதற்காக சமர்ப்பித்துள்ளது. விவசாயிகளுக்கும் பிரச்சினை ஏற்படாத வண்ணம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுத்து வருவதுடன், இடைநிலை தரகர்களுக்கு கொள்ளையடிக்க நாம் அனுமதியளிக்க மாட்டோம்.
பாரிய நெல் ஆலையாளர்களுடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், நாட்டில் தேவைக்கு மேலதிகமாக நெல் உற்பத்தி இடம்பெற்றுள்ளது. அவ்வாறெனின் அவர்களிடம்தான் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதா நெல் இருக்க வேண்டும்.
அதனால் அரிசியை தட்டுப்பாடின்றி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனையும் செய்யப்படும்.
நுகர்வோர் இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொள்ள பிரதான காரணம் விவசாய திணைக்களம் நெல் கொள்வனவுகளை மேற்கொண்டிருக்காமைதான். அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் உரிய வகையில் அவற்றை சந்தைக்கு விநியோகித்து சந்தையில் போட்டியித்தன்மையை உருவாக்க முடிந்திருக்கும்.” என்றார்.








