மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு நேரடியாகக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

“இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இஸ்ரேலின் பொறுமை இப்போது குறைந்து விட்டது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது  X  தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் தனது முன்னோடிகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஈரானிய சர்வாதிகாரியின் உத்தரவைப் பின்பற்றி, இஸ்ரேலை எதிர்த்துச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்,” என்று காட்ஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, “லெபனானின் பிரதிநிதியாக உள்ள ஹிஸ்புல்லா கவனமாக இருக்க வேண்டும். இஸ்ரேலின் பொறுமை இழந்துவிட்டதையும், அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்கத் தயார் என்ற செய்தியையும் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது,” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹிஸ்புல்லாவின் தற்போதைய தலைவர் நைம் காசெம், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை நோக்கி மேற்கொள்ளும் மிருகத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, லெபனானில் உள்ள எங்கள் இயக்கம் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கேற்ற முறையில் பதிலளிக்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.