களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (07) இடம்பெற்ற வீதி விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அளித்த தகவலின்படி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மாங்காட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து மட்டக்களப்பு – கல்முனை வீதியில், மட்டக்களப்பு திசையிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி குருக்கள்மடம் பகுதியை அடைந்தபோது ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மூவரும் முதலில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பின்னர் அவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








