2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த தகவல், பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி, முன்பிள்ளைப் பருவ (Early Childhood) பாடத்திட்டத்திற்கான கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது.

சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி அமர்வுகள் வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடங்கவுள்ளன.

புதிய பாடத்திட்டத்தை சிறப்பாக கையாளும் வகையில், ஒவ்வொரு மாகாணத்திலும் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

அதேநேரம், பாடசாலைகளை மூடுவது அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், மாறாக அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி மற்றும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதே அரசின் நோக்கம் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here