இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவர் இதனை “உலகத்திற்கே ஒரு சிறந்த நாள்” என்று வர்ணித்ததுடன், காசா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அதைப் பரிசீலிக்கிறேன்,” என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெறுவதால் அங்கு செல்லும் வாய்ப்பும் இருப்பதாக கூறினார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்ப் தனது மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மத்திய கிழக்குக்குச் செல்வது குறித்தும் பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாதான ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து பிணைக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இஸ்ரேல் தமது படைகளை இணக்கப்பட்ட எல்லைக்குள் மீளப் பெறும். இது ஒரு நிரந்தர சமாதானத்தை நோக்கிய முதல் படி என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை “இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்” என வர்ணித்து, இதை அங்கீகரிப்பதற்காக வியாழக்கிழமை அரசாங்கக் கூட்டத்தை அழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்தவுடன் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் எனவும், ஹமாஸ் இதற்கான உறுதிப்பாட்டை வழங்கி, இஸ்ரேல் ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவதை உறுதி செய்யுமாறு ட்ரம்ப் மற்றும் பிற நாடுகளிடம் கோரியுள்ளது.

இந்த உடன்படிக்கை நிலைத்திருந்தால், ட்ரம்ப் அதனைத் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முக்கிய வெளியுறவுக் கொள்கை சாதனையாகக் கருதுவார் என சர்வதேச ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன. எனினும், காசாவின் நிர்வாகம் மற்றும் ஹமாஸின் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன.

இவ்வுடன்பாடு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் தொடங்கிய இராணுவ நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து எட்டப்பட்டுள்ளது. ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சின் தகவலின்படி, அந்த நடவடிக்கைகளில் இதுவரை குறைந்தது 67,183 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 20,179 குழந்தைகள் அடங்குவர்.

போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுதலை பற்றிய செய்தி வெளியாகியதும், காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here