அரசாங்கத்தை நவீனமயமாக்குவதே தனது இலக்காக இருப்பதாகவும், அதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
“எங்கள் அரசாங்கம் வேலை வழங்கும் மையமல்ல, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகும். அரச சேவையானது பொருளாதாரத்தையும் சமூக நிறுவனத்தையும் கட்டமைக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் இடிபாடுகளின் குவியல் போல் உள்ளது; அதை நவீனமயமாக்க 62,000 பேர் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டு விரைவில் சேர்க்கப்படுவார்கள்” என அவர் கூறினார்.
மேலும், சுற்றுலாத் துறையை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதையும், தற்போது 4 பில்லியன் டொலராக உள்ள சுற்றுலாத் துறை வருவாயை 2030 ஆம் ஆண்டுக்குள் 8 பில்லியன் டொலராக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக இருப்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.






