வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் இரண்டு யானைகள் தவறி விழுந்ததில், ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றொன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட கிராம அலுவலருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும், பொலிசாருக்கும் அறிவித்தார்.
வனத்துறையினர் பெரும் முயற்சியுடன் ஒரு யானையை உயிருடன் மீட்டனர். மற்றைய யானை சேற்றில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அதன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








