சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அதிக அளவில் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கான அனுமதிகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுற்றறிக்கையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் காணப்படும் பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சுற்றறிக்கை தொடர்பில் இலங்கை இலவச சுகாதார சேவை சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோய் டி மெல் தெரிவித்ததாவது, வெளிநாட்டு விடுமுறைக்கான உரிமைகள் நிறுவனக் குறியீட்டின் கீழ் வழங்கப்பட்டவை என்பதால், சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கையால் அவை ரத்தாக முடியாது. மேலும், பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட உள்ளூர் விடுமுறை உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து, அதற்கான பயிற்சிகள் மற்றும் விசாக்களைப் பெற்றிருந்த பல ஊழியர்கள் இப்போது கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் அமைச்சின் புதிய முடிவு வலுவற்றதாக கருதப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, குறித்த சுற்றறிக்கையை ரத்து செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அந்த சங்கம் கடிதம் மூலம் கோரியுள்ளது.








