தர்மபுரம் பகுதியில் பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரம் பகுதியில் பெறுமதிமிக்க கன்று ஈனும் நிலையில் இருந்த பசு மாடு ஒன்றை மேய்ச்சலுக்காக அயலவர் காணியில் கட்டி வைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் (01.12.2024) இரவு சந்தேக நபர் தனது குழுவினருடன் பசுமாட்டினை அதன் வயிற்றில் இருந்த கன்றினை எடுத்து வீசிவிட்டு இரவோடு இரவாக இறைச்சிக்காக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
கால்நடை உரிமையாளர் வேறு பகுதிக்கு தனது மாட்டினை மாற்றி கட்டுவதற்காக சென்ற பொழுது கால்நடையை காணாத நிலையில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையில், தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து தர்மபுரம் பகுதியில் தங்கி இருந்த வீட்டினை சுற்றி வளைத்த பொழுது அங்கிருந்து ஒரு தொகை மாட்டு இறைச்சியும் மாட்டை வெட்டுவதற்காக பயன்படுத்திய கத்தி, கோடாலி மற்றும் இறைச்சியை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய கப்ரக வாகனம், மோட்டார் சைக்கிள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றி உள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.


அத்துடன் தொடர்ச்சியாக தேடுதல் நடத்திய பொழுது அப்பகுதியில் ஐந்து மாடுகளை களவாடி இறைச்சிக்காக அளித்தமைக்கான கால்நடைகளின் கயிற்றினையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இதுவரையில் ஐந்து கால்நடைகளை இறைச்சிக்காக அழித்தமையை சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் சந்தேக நபரினை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

- கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்








