பாணந்துறையில் இயங்கும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதான திலினி சொய்சா மற்றும் 19 வயதான மலிஷா ஆகியோர், கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
திலினியின் உடல்நோய்க்கான அவரது முக்கிய இரத்த நாளத்தில் உருவான இரத்த உறைவு (த்ரோம்பஸ்) காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை தடுக்கக்கூடிய ஆபத்தான நிலையாகும்.
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், அதிக மன அழுத்தம், சோர்வு, வேலை பளு போன்ற காரணிகளும் இத்தகைய உடல்நிலை பாதிப்புகளை உருவாக்கக்கூடியவை என்றும், இதுவே உயிரிழப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் இந்த இருவரும் உயிரிழப்பதற்கு முன்பு சமையலறையில் உணவு உண்ட பின்னர் உடல்நிலை மோசமாகியதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, பாணந்துறை பொது சுகாதார ஆய்வாளர் அந் நிறுவனத்தின் சமையலறையை ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை சேகரித்தார்.
இவை தற்போது களுத்துறை தேசிய சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், அதே நிறுவனத்தில் பணியாற்றும் மற்ற மூன்று ஊழியர்களும் நேற்று முன்தினம் நோய்வாய்ப்பட்டு பாணந்துறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலும், மரணத்திற்கான காரணம் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.








