நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில் உள்ளன.

இதன்காரணமாக நாளை முதல் மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடையுடன், பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்தன.

இதனால் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டது.

இதன் விளைவாக, 2600 மெகாவாட் என்ற நாளாந்த அதிகபட்ச மின்சார தேவையைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு மின்சார சபைக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதென வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

அதன்படி, நேற்றும் நேற்று முன்தினமும் பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை நான்கு வலயங்களின் கீழ் மின் தடையை அமல்படுத்துவதற்குப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியது.

இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை விரைவாக மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு முன்னர் ஒரு மின்பிறப்பாக்கியை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம் தடையில்லாத மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here