முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பணத்திற்காக விற்று விட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணிலுக்கு ஆதரவு வழங்காது என அறிவித்ததன் பின்னர், அக்கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையிலலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (05.08) இரவு இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க , கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண, அலி சப்ரி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கரமசிங்கவின் வெற்றிக்காக மாவட்ட ரீதியில் பொது மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, “இன்றைய கலந்துரையாடல் மாவட்டக் கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அமைத்தல் என்பவை தொடர்பில் ஆகும். எங்களிடம் 92 உறுப்பினர்கள் இருந்தனர். இன்னும் சிலர் உள்ளனர். பெயர்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும். ” எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி எம்மைப் பிரிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகின்றேன். அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குமாறு நாட்டு மக்கள் கோரியுள்ளனர்.
மேலும் ரணில் விக்கிரமசிங்க எப்போதும் கட்சியாக ஒன்றிணைந்து பணி புரியுமாறு கூறுபவர். இந்த பொதுஜன பெரமுனக் மக்களின் வியர்வையால் உருவாக்கப்பட்ட ஒன்று இதனை பணக்காரர்களுக்கு வாடகைக்கு வழங்குவதோ , விற்பணைசெய்வதற்கான கட்சியோ அல்ல” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.






