கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அபகரித்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் போது இக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்றபோது, அது கொள்ளையிடப்பட்டதாக நம்பும்படி திட்டமிட்டு, அந்தப் பணத்தை அபகரித்தது தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்தை முன்னிட்டு, பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரங்மினியப் பிரதேசத்தில் களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பணியக அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றைச் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் பயணித்த ஒருவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முச்சக்கரவண்டி சாரதியையும், பைக்கில் பணம் எடுத்துச் சென்ற நபரையும் கைது செய்து பொலிஸார் ஆரம்ப விசாரணைகளைத் தொடங்கினர்.

விசாரணைகளின் போது, குறித்த பணம் நிறுவன ஊழியரால் திட்டமிட்ட முறையில் ஒரு சந்தேக நபருக்கு வழங்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் போல உருவாக்கப்பட்டதாக வெளிச்சம் பெற்றது.

மேலும் விசாரணைகளில், 15 இலட்சம் ரூபாயுடன் ஒரு பெண் சந்தேக நபரையும், மொத்தம் 2 கோடியே 22 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாயுடன் (Rs. 22,245,000) மேலும் ஐந்து நபர்களையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன், குற்றச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 45 வயதுக்கிடைப்பட்டவர்கள், மேலும் பெண் சந்தேக நபர் 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் களனி, பேலியகொட, வெள்ளம்பிட்டிய, மாவனெல்லை மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

களனி பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here