இணையவழி நிதி மோசடி தொடர்பில் சீனப் பிரஜைகள் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் சீன தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பாதிக்கும் எனவும் அந்த தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த தூதகரம் குறிப்பிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, புவியியல் அமைவிடம் மற்றும் சீனாவுடனான நட்புறவு போன்றவற்றில் இலங்கைக்கு உள்ள நன்மைகள் மற்றும் இணைய மோசடிகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் சில குழுக்கள் இலங்கைக்கு வந்து தொடர்ந்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 200 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








