அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குற்றவாளிகளைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரவு ரோந்துகள் மற்றும் நடமாடும் ரோந்துகள் நடத்தப்படுகின்றன.
மேலும், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள், 10 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒழுங்கமைக்கப்படாத குற்றச் செயல்களைத் தடுக்கவும், அவற்றில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் விசேட நடவடிக்கைப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.








