திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான சர்ச்சையை பயன்படுத்தி எந்த தரப்பினரும் அரசியல் இலாபம் ஈட்டுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

“நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பேணுவது காவல்துறையின் பொறுப்பு. எந்த ஒரு சம்பவத்தையும் காரணமாகக் கொண்டு சட்டச் சீர்குலைவு ஏற்பட அனுமதிக்க முடியாது” என வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது:

குறித்த இடத்தில் தற்காலிக சிற்றுண்டிச்சாலை அமைக்க சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அந்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் கட்டடத்தை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அங்கு புத்தர் சிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டின் வரலாற்று அனுபவத்தின்படி, புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டால் தீவிர விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது

பொலிசார் விவகாரம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றம் விசாரணையை நவம்பர் 26 வரை ஒத்திவைத்துள்ளது. அத்துடன், அதுவரை அந்தப் பகுதியில் புதிய கட்டுமானங்கள் எதையும் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமையத்தைக் காக்க அந்தப் பிரதேசத்தில் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அந்த பகுதியில் தேரர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

“இந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு யாராவது கூட்டங்களை நடத்தி அரசியல் இலாபம் பெற முயன்றால், அரசாங்கம் அதை முறியடிக்கும். தற்போது அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அடுத்த அறிவுறுத்தல்களை அரசாங்கம் கவனித்து வருகிறது.”என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here